அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இன்று ஒரு தகவல் இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..
2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போன இந்தியாவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவைப் பற்றிதான் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. தந்தை ஓர் வர்த்தகர், தாய் இல்லத்தரசி. மற்ற பெண் குழந்தைகளைப்போல் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு பதில் கல்பனா விமானங்களை வரைந்தும் ஓவியம் தீட்டிக்கொண்டும் இருப்பார். சிறு வயதிலேயிருந்தே விண்வெளி பொறியாளராக வரவேண்டும் என்பதுதான் கல்பனாவின் விருப்பமாக இருந்தது.
கல்பனா தன் கிராமத்து தெருக்களில் நின்றுகொண்டு ஆகாயத்தை பார்த்து வியப்பார். ஆகாயத்தில் அமைதியை கிழித்துக்கொண்டு போகும் விமானங்களின் பாதையை இமைகொட்டாமல் பார்த்துகொண்டு இருப்பார். தன் சகோதரனின் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போதெல்லாம் அவரது பார்வை ஆகாயத்தை நோக்கிதான் உயரும். கர்னாவில் உள்ள தாஹூர் பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்த கல்பனா சண்டிகாரில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான பொறியியல் பயில விரும்பினார். அந்த துறையில் பயின்ற மற்ற அனைவரும் ஆண்களாக இருந்ததால் முதலில் பெற்றோர்கள் மறுத்தனர்.
ஆனால் கல்பனாவின் எண்ணத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை. அந்த கல்லூரியில் 1982 ல் இளங்கலை பட்டம் பெற்றார். ஆகாயத்தைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருந்த அவரை அமெரிக்கா வரவேற்றது. 1984 ஆம் ஆண்டு டெக்ஸஸ் பல்கலைகழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து கொலோராடோ பல்கலை கழகத்தில் அதே பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்ற உடனேயே நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தில் சேர்ந்தார். எளிய மொழியில் விளக்குவதற்கு சிரமமான சில ஆராய்ட்சிகளில் ஈடுபட்டார்.
1993 ல் கல்பனா ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே கல்பனாவின் விண்வெளி கனவு நனவாக தொடங்கியது. விண்வெளி வீரர், வீராங்கனை பயிற்சி பெற விண்ணப்பத்திருந்த சுமார் மூவாயிரம் நபர்களிலிருந்து ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் கல்பனா. ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்கானல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கல்பனா.
1995 ல் பயிற்சி முடிந்து வின்வெளி வீராங்கனையாக தகுதி பெற்றார். அவரது முதல் வின்வெளி பயணம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ந்தேதி தொடங்கியது. ஆறு வீரர்களுடன் ப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து விண்ணுக்கு செலுத்தபட்டது கொலம்பியா வான்கலம். அந்த வான்கலத்தின் இயந்திர கரங்களை இயக்கும் முக்கிய பொறுப்பு கல்பனாவுக்கு தரப்பட்டது. 16 நாட்கள் விண்வெளியில் வானத்தையும் நட்சத்திரங்களையும் நலம் விசாரித்த கல்பனா 252 தடவை பூமியை சுற்றியதோடு சுமார் ஆறரை மில்லியன் மைல் தொலைவு பயணம் செய்தார். டிசம்பர் ஐந்தாம் நாள் ஆறு விண்வெளி வீரர்களும் வெற்றியோடு பூமிக்கு திரும்பினர். அன்றைய தினம் விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் கல்பனா.
முதல் வின்வெளி பயணத்தை முடித்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் விண்ணுக்கு செல்ல கல்பனாவுக்கு அழைப்பு வந்தது. முதல் பயணத்தில் அவர்களை பத்திரமாக தரையிறக்கிய அதே கொலம்பியா வான்கலத்தில் 2003 ஆம் ஆண்டு சனவரி 16 ந்தேதி கல்பனா உட்பட ஏழு வீரர்கள் விண்ணுக்கு பாய்ச்சப்பட்டனர். பிப்ரவரி முதல் தேதிவரை அந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. சுமார் 80 அறிவியல் ஆராய்ட்சிகளை அவர்கள் நடத்தினர். அந்த பதினாறு நாள் பயணத்தை முடித்துகொண்டு வெற்றிக்கரமாக தரையிறங்க பதினாறு நிமிடங்கள் இருந்தபோது கொலம்பியா வான்கலம் விண்ணில் வெடித்து சிதறியது. கல்பனா என்ற நம்பிக்கை பூ 41 வயதில் உதிர்ந்தது.
கொலம்பியா விண்வெளி பயணம் மேற்கொள்ளும் முன் அவரிடம் நடத்தப்பட்ட பேட்டியில் உங்களுக்கு ஊக்கமூட்டியவர்கள் அல்லது ஊக்கமூட்டிகொண்டிருப்பவர்கள் யார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு கல்பனா இவ்வாறு கூறினார்:
முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடும் எவரை பார்த்தாலும் எனக்கு ஊக்கம் ஏற்படும். உதாரணத்திற்கு எனது உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணியை அவர்கள் முழுமனதோடு செய்த விதம் கற்பிப்பதில் எங்களோடு அதிக நேரத்தை செலவிட்ட விதம், அவர்களின் பொறுமையைப் பற்றி இப்போது நினைத்து பார்த்தாலும் வியப்பாக உள்ளது. இதைத்தவிர மேலும் கண்டுபிடிப்பாளர்களின் கதைகளும் எனக்கு ஊக்கம் தரும்.
கல்பனாவின் விண்வெளி வெற்றியால் இன்று பலர் விண்வெளி கனவுகளை சுமந்துகொண்டு இருக்கின்றனர் இதுதான் கல்பனா இந்த உலகத்திற்கு விட்டு சென்ற சொத்து. அடக்கம் செய்யக்கூட அவரது உடல் கிடைக்காமல் போய்விட்டது . ஒரு சாதாரன பள்ளியில் படித்தும் பலர் வியக்கும்படி தன் கனவுகளை வாழ்ந்து காட்டினார் கல்பனா. இன்றைய மாணவர்களும் சிறந்த கல்வியோடு தன் கனவுகளை நோக்கி பயணித்தால் கல்பனாவைப் போன்று சாதிக்க முடியாதா?
வானத்தை கனவு கண்ட கல்பனா சாவ்லா அந்த வானத்தையே வசமாக்கிக்கொண்டதில் ஆச்சரியமில்லை. நாம் எல்லோரையும் விட வானத்திற்கு அருகில் சென்றுவிட்டு வந்தவர் கல்பனா. கனவோடு கலந்த உழைப்பும் முழுமனதோடு காரியத்தில் ஈடுபடும் பண்பும்தான் கல்பனாவை விண்ணுக்கு கொண்டு சென்றது. அவர் பிறந்த நமது இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தது. கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நன்றி இன்று ஒரு தகவலின் Post
0 கருத்துகள்:
கருத்துரையிடுக