அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்..
இந்தக்கட்டுரை France Thowheed Jamath (FRTJ) இன் இணையதளத்தில் மறுமை எனும் பகுதியில் வெளியிடப்பட்டிருந்தது இந்தக்கட்டுரையை பலரும் படிக்க வேண்டும் என்பதற்காக Copy செய்து இங்கு பதிந்துள்ளேன்
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கின்றது. அதை நோக்கியே அவன் தனது பயணங்களை அமைத்துக் கொள்கின்றான். அதற்க்காக தனது முழு முயற்ச்சியையும் அர்ப்பணிக்கின்றான். அந்த வெற்றியின் ருசியை கூடிய விரைவில் தான் சுவைக்க வேண்டும் எனவும் ஆவல் கொள்கின்றான். அதை முன்னோக்கியே தனது ஒவ்வொரு செயலையும் அமைத்து கொள்வதை நாம் காண்கிறோம்.
மற்ற மனிதர்களின் வெற்றி இலக்கிலிருந்து முஸ்லிம்களின் இலக்கு முற்றிலுமாக மாற்றம் பெறுகின்றது. ஒரு முஸ்லிமுக்கு உன்மையான வெற்றியென்பது மறுமையில் அவன் தனது இறைவனுக்கு முன்னால் நீதி விசாரனைக்காக நிறுத்தப்படும் பொழுது கிடைக்கக் கூடிய வெற்றியே. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இதை சொல்லிக் காட்டுக்கின்றான்:
ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)
அந்நாளில் வேதனையிலிருந்து காக்கப்படுவோர்க்கே அவன் அருள் புரிந்தான். அதுவே தெளிவான வெற்றி. (அல்குர்ஆன் 6:16)
எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 23:102)
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 21:35)
இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். (அல்குர்ஆன் 55:26)
இந்த நிச்சயிக்கப்பட்ட மரணத்திற்க்கு பிறகு ஒரு விசாரணை உண்டு; அதன் முடிவில் ஒரு நிரந்தர நல்வாழ்வோ (சுவர்க்கம்) அல்லது நிரந்தர துர்வாழ்வோ (நரகம்) நிச்சயம் என நம்பும் முஸ்லிம் கட்டாயம் அந்த விசாரணையில் வெற்றி பெறுவதையே உன்மையான வெற்றியாக கருதுவான். அது தான் சத்தியமான உண்மை.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இந்த நிலையான மறுமை வெற்றி யாருக்கு என பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான். அவற்றில் சிலவற்றை உற்று நோக்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
ஈமான் கொள்வது
நிச்சமயமாக அனைத்து விடயங்களை விடவும் ஒரு மனிதனின் ஈமான் மறுமை வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.... இது ஒரு முஸ்லிமுடைய அடிப்படை நம்பிக்கைகளில் உள்ளாதாகும்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அல்குர்ஆன் 23:1)
அல்லாஹ் எதையெல்லாம் நம்ப வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளானோ, அவைகளை அப்படியே நம்புவது ஈமானில் உள்ளதாகும்.... அல்லாஹ்வை நம்புதல், வானவர்களை நம்புதல், விதியை நம்புதல், வேதங்களை நம்புதல், நபிமார்களை நம்புதல், இறுதி நாளை நம்புதல் போன்றவை இதில் அடங்கும். ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.
அலிஃப், லாம், மீம். இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர ்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 21:1-5)
கொன்ட ஈமானில் உறுதி
எல்லா நிலைகளிலும் ஏற்றுக்கொண்ட ஈமானில் உறுதியாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். உறுதியான நம்பிக்கைக் கொண்டு, அதில் நிலையாக நிற்க கூடியவர்களையே அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.
வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகி றது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன் 13:17)
ஈமானிய உறுதிக்கு சில உதாரணங்களையும் நம்முடைய படிப்பினைக்காக அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லி காட்டுகின்றான்.
பிர்அவ்னின் மனைவி மர்யம் (அலை)
உலக மூஃமின்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இவ்விரு பெண்களையும் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். இதற்கு அவர்கள் உறுதியான் ஈமான் கொண்டு அதில் நிலையாக நின்றதை அல்லாஹ் காரணமாகக் கூறுகிறான். துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்ட போதும் தமது இறைவனையே சார்ந்தவர்களாக அவர்கள் இருந்தது உறுதிமிக்க ஈமானுக்கு எடுத்துக்காட்டு......
'என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். (அல்குர்ஆன் 66:11)
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 66:12)
பிர்அவ்ன் vs மந்திரக்காரர்கள்
மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அற்புதத்தை நேரடியாகக் கண்ட பிர்அவ்னுடைய மந்திரக்காரர்கள், உடனடியாக ஈமான் கொள்கின்றனர். ஈமான் கொணட்து மட்டுமல்லாது, கொடியவனான பிர்அவ்ன் அவர்களை வேதனையை கொண்டு எச்சரிக்கும் போதும் கொண்ட ஈமானில் உறுதியாக அல்லாஹ்வையே சார்ந்து நின்றதை அல்லாஹ் பின்வருமாறு சொல்லிக் காட்டுகின்றான்.
உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, 'மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்' என்றனர். 'நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையான வரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்' என்று அவன் கூறினான். 'எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்' என்று அவர்கள் கூறினார்கள். 'எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப் பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்' (என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 20:70-73)
ஈமான் கொண்டு சில பொழுதுகளே ஆன போதும் அவர்கள் காட்டிய உறுதி நம் அனைவருக்கும் மிகச்சிறந்த படிப்பினை. 10 வருட முஸ்லிம், 20 வருட முஸ்லிம், பிறந்ததிலிருந்து முஸ்லிம், தலைமுறை தலைமுறையாக முஸ்லிம் என பெருமைபட்டுக் கொள்ளும் நாம், சோதனைகள் ஏற்படும் போது நம்முடைய ஈமானில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சிந்திக்க கடைமைப்பட்டுள்ளோம். சிறு சோதனை ஏற்பட்டால் கூட சகிக்காமல் பச்சையான ஷிர்க், பித்அத் என வழிதவறுவோர் எத்தனை பேர்?
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. 'அல்லாஹ்வின் உதவி எப்போது?' என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)
எவ்வளவு தான் துன்பங்களும் சோதனைகளும் வந்தாலும், அவையெல்லாம் நிரந்தரமல்ல.... சகித்துக் கொண்டு ஈமானிய உறுதியோடு இருந்தால் அல்லாஹ்விடமே மகத்தான வெற்றி உள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
நபிமார்களின் சமூகம்:
துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட போதும், தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட போதும், நபிமார்களும் அவர் உடனிருந்தவர்களும் அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்திருந்த்து அவர்களின் ஈமானின் வலிமையை பறைசாற்றுகின்றது.
'அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' (என்றும் கூறினர்.) 'உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்' என்ற ு (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். 'அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமி யில் குடியமர்த்துவோம்' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது. (தூதர்கள்) வெற்றி பெற்றனர். பிடிவாதம் பிடித்த ஒவ்வொரு அடக்குமுறையாளனும் இழப்பை அடைந்தான். (அல்குர்ஆன் 14:12-15)
இறையச்சம் (தஃக்வா)
படைத்த இறைவன் நம்மை எல்லா நிலைகளிலும் கண்கானித்துக் கொண்டிருக்கின்றான் என சிந்திக்கும் மனிதன் தவறுகள் செய்வதிலிருந்தும், தனது இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்தும் தன்னை தற்காத்துக் கொண்டு மறுமை வெற்றியை நோக்கி விரைந்து செல்கிறான்.
மறைவான நிலையிலும், வெளிப்படையான நிலையிலும் மனிதன் இறை விருப்பத்திற்க்கு எதிரான காரியங்கள் செய்வதை விட்டும் இந்த தஃக்வா அவனை காக்கின்றது. அதன் மூலம் நிரந்தரமான வெற்றியின் பக்கம் அவனை கூட்டிச் செல்கிறது.
''அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7:128)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப் போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:35)
உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது. உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல் வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 64:15-16)
அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் முற்றிலுமாக கட்டுப்படுவது
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதன் மூலமே இறையருள் கிட்டும், சொர்க்கம் கிடைக்கும். இதில் அலட்சியமாக இருந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாவிட்டால் செய்கின்ற நல்லறங்கள் அனைத்தும் பாழாகி விடும்.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 5:56)
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார். (அல்குர்ஆன் 33:70-71)
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விடயத்தில் கட்டளையிட்டுவிட்டால் நம்முடைய சுய விருப்பு வெருப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு முற்றிலுமாக கட்டுப்பட வேண்டும்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது 'செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51-52)
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாதவர்கள் காஃபிர்கள். இறைத் தூதரின் விளக்கமும் வஹீ தான். திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்லிம்களின் மீது கட்டாயக் கடமை.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 8:46)
இது எந்த அளவிற்கு குர்ஆனில் வலியுறுத்தப்படுகின்றது என்றால், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட மறுத்தல் அது இஸ்லாத்தை விட்டே ஒருவனை வெளியேற்றும் காரணமாக கூறப்படுகின்றது.
(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)
அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! (அல்குர்ஆன் 31:7)
நன்மையை ஏவுவது.... தீமையை தடுப்பது
ஒரு சிறந்த சமுதாயமாக (கைர உம்மத்) அல்லாஹ் உருவகப்படுத்துவது நிச்சயம் நன்மையை ஏவி தீமையை தடுக்கக் கூடியவர்களையே.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
நன்மையை ஏவுவது எவ்வளவு முக்கியமோ அதை விட அதிகமான முக்கியத்துவத்தை தீமையை தடுக்க நாம் பயன்படுத்த வேண்டும். நாங்கள் நன்மையை மட்டுமே ஏவுவோம், தீமையை தடுப்பதனால் பகைமை ஏற்படுகிறது, ஒற்றுமை குலைகிறது என சப்பைக் கட்டு கட்டி அதை அலட்சியம் செய்வர் இன்றைய சமுதாயத்தில் பெறுகி விட்டனர். இது நிச்சயம் அல்லாஹ்வுடைய தூதர் காட்டித் தந்த வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமான சிந்தனையாகும்.
எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததினால் ஒரு கட்டளையை மட்டும் செயல்படுத்துவோம், ஆனால் அதே நேரத்தில் மற்றொன்றை செய்தால் நாங்கள் தனிமைப் படுத்தப்படுவோம் என சாக்கு போக்கு கூறி தீமைக்கு எதிராக களமிறங்காமல், குரல் கொடுக்காமல், பிரச்சாரம் செய்யாமல் இருப்பது, அந்த தீமைகளில் அல்லாஹ் அவர்களின் பெயர்களையும் சாட்டிவிடுவான் என்பதில் எச்சரிக்கையாக இருக்கட்டும்.
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 3:110)
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)
''கெட்டதும், நல்லதும் சமமாகாது'' என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன் 5:100)
இவ்விடத்தில் ஒரு சாரார் செய்யும் தவறையும் சுட்டிக்காட்ட கடைமைப் பட்டுள்ளோம். தீமையை தடுக்கின்றேன் என களத்தில் புகுந்த சிலர், அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத முறைகளை கையாண்டு மேலும் பல தீமைகளை சமுதாயத்தில் புகுத்தி விட்டதை நாம் காண முடியும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் “நன்மையை கொண்டு தீமையை தடுக்க கூறுகிறான்”. நிச்சயமாக நன்மையே தீமையை கொல்லும் மிக ப் பெரிய ஆயுதம்.
அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு. (அல்குர்ஆன் 13:22)
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது. (அல்குர்ஆன் 41:34-35)
தீமைகளை தடுத்து நன்மையை ஏவ களமிறங்கினால் நிச்சயம் சோதனைகள் உண்டு. தீமைகளால் நிறைந்து வழியும் இந்த உலகத்தில் அதை தடுக்க நம்முடைய கைகளையோ, நாவையோ, ஏன் உள்ளத்தையோ நாம் ஈடுபடுத்துவதனால் தோல்விகளும், வேதனைகளும், கடும் எதிர்ப்புகளும் துன்பங்களும், சமுதாய துஷ்பிரயோகங்களும் எதிர்பார்க்கக் கூடியதே. ஆனால் மறுமையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு முஸ்லிமுக்கு இந்த தற்காளிக சோதனைகளும் இன்னல்களும் ஒரு பொருட்டே அல்ல..... இறுதி வெற்றி நிச்சயம் பொறுமையாளர்களுக்கே..... இந்த சத்தியத்தை எதிர்ப்பவர்களுடன் உலகத்தின் அத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தாலும், நம்பிக்கையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்...... பொறுப்பேற்றுக் கொள்ள அவன் போதுமானவன்.
(லுக்மான் தன் மகனிடம்..) என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும். (அல்குர்ஆன் 31:17)
வரம்பு மீறுதல் கூடாது
இன்று அற்ப உலக லாபங்களுக்காக சர்வ சாதாரணமாக அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்படுவதை பார்க்கின்றோம். இவை அனைத்தும் நிச்சயமாக வழிகேடுகளே.
அல்லாஹ் தன்னுடைய இந்த மார்க்கத்தை, தீனுல் இஸ்லாத்தை முற்றிலுமாக நிறைவு செய்துவிட்டேன் என பறைசாற்றும் பொழுது, “இல்லை இல்லை” அது முழுமை பெறவில்லை, எங்கள் இமாம்களும் பெரியார்களும் தான் இதை முழுமைப் படுத்துகிறார்கள் என வாதிடும் போக்கு மிகவும் ஆபத்தானதாகும். அப்பட்டமான ஷிர்க்காகும். இது மறுமை விசாரணையில் நிச்சயம் தோல்வியை ஏற்படுத்தி நரகப் படுகுழிக்கு கொண்டு செல்ல போதுமானதாக உள்ளதை நாம் காண முடியும்.
உதாரணமாக, அல்லாஹ் வட்டியின் அனைத்து வடிவங்களையும் தடை செய்திருக்க “பேங்க் வட்டி கூடும்” என கூறுவதும், போதையின் பக்கம் நெருங்காதீர்கள் என ஏவியிருக்க “கொஞ்சமாக குடித்தால் தவறில்லை” என கூறுவதும் நிச்சயம் வரம்பு மீறுதலேயாகும். இவை அல்லாஹ் விரும்பாத அவனுடைய வெறுப்புக்குறிய பண்புகளாகும். அல்லாஹ் வரம்புகளை நிர்ணயித்திருக்க அதை மீறுவது அல்லது அதை குறை காணுவது, அல்லாஹ்வுக்கே சொல்லித் தரும் (நவூதுபில்லாஹ்) மாபெரும் பாவமாகும்..... வரம்புகள் ஏற்படுத்தப் பட்டிருப்பது முற்றிலுமாக பின்பற்றப்படுவதற்கே, நிச்சயமாக மீறுவதற்கல்ல.....
சிலர் தமக்கு சாதகமான விசயத்தில் வரம்புகளை சரிகண்டு விட்டு, தமக்கு பாதகம் தரும் என கருதும் விடயங்களில் அவற்றை உதாசினப்படுத்துவதை காணுகிறோம். அல்லது அவைகளை அறிந்தும் கண்டும் காணாததுமாக இருப்பதை பார்க்கலாம்... இவையும் நிச்சயம் வழிகேட்டிற்கே இட்டுச் செல்லும் என்பதை கீழ்காணும் அல்லாஹ்வின் வார்த்தைகள் பறைசாற்றுவதை காணலாம்......
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 5:87)
இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 4:13)
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:14)
எதிரிகளின் எண்ணிக்கை / பலத்தை கண்டு அஞ்சாமைமற்றும் அல்லாஹ்வுடைய உதவியில் உறுதியான நம்பிக்கை
இந்த சத்திய பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வேளையில் எதிரிகளின் எண்ணிக்கையையும், அவர்களின் பலத்தையும் கொண்டு அச்சுறுத்தப்படுவது இயற்கையே. இது எல்லா நபிமார்களும் அசத்தியவாதிகளிடம் சந்தித்த அச்சுறுத்தல்களே.
அடக்குமுறைகள், ஊர் விலக்கல்கள், காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இந்த சத்திய பிரச்சாரத்தை முடக்கி விடலாம் என கனவு காண்கிறார்கள். ஆனால் இறுதி வெற்றி நிச்சயம் அல்லாஹ்வை சார்ந்திருப்பவர்களுக்கே.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் 9:32)
''ஷுஐபே! உம்மையும், உம்முடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்'' என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்ட பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) ''நாங்கள் (உங்கள் மார்க் கத்தை) வெறுத்தாலுமா?'' என்று கேட்டார். (அல்குர்ஆன் 7:88)
நபி(ஸல்) காலத்தில் அனைத்து எதிரிகளும் ஒன்று திரண்டு அதிகமான படை பலத்துடன் நம்பிக்கையாளர்களை எதிர்த்த போதும் இதே அச்சுறுத்தல் தான் அவர்களுக்கும் விடப்பட்டது.... அதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான், இதை கேட்டவுடன் நம்பிக்கையாளர்கள் தளர்ந்து விடவில்லை மாறாக அவர்களது ஈமான் வலுப்பெற்றது...... அவர்கள் கூறினார்கள் “ஹஸ்பனல்லாஹ் வ நியமல் வகீல்” (எங்களுக்கு பொறுப்பேற்ப்பதறக்கு அல்லாஹ் போதுமானவன்).
“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில ்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். தனது நேசர்களை ஷைத்தான் தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! ((அல்குர்ஆன் 3:173-175)
'உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)
இது தான் உறுதியாக இந்த சத்திய பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒவ்வொரு இறை விசுவாசியின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். துன்பங்களும், சோதனைகளும் இந்த சத்திய பிரச்சாரத்தில் பின்னிப் பினைந்தவை. அதன் மூலம் அல்லாஹ் நம்முடைய ஈமானை சோதிக்கின்றான் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும்.
அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட அந்த முன்னால் மந்திரவாதிகளை பிர்அவ்ன் அவனது படை பலம் மற்றும் கடுமையான அதிகாரத்தை கொண்டே மிரட்டுகிறான். ஆனாலும் இறுதி வெற்றி அந்த ஈமானிய உள்ளங்களுக்கே. அல்லாஹ் அவர்களையே காப்பாற்றி அவனை மூழ்கடித்தான்.
உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, 'மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்' என்றனர். 'நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையான வரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்' என்று அவன் கூறினான். 'எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்' என்று அவர்கள் கூறினார்கள். 'எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப் பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்' (என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 20:70-73)
நீங்கள் உற்று நோக்கினால் அல்லாஹ் ஹக்கையும் (சத்தியம்), பாத்திலையும் (அசத்தியம்) இவ்வாறே வேறுபடுத்திக் காட்டுகிறான் என்பதை காணலாம். சத்தியம் முன்னெடுத்து செல்லப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அனைத்து பாத்தில்களும் ஒன்று சேர்ந்து அதை எதிர்ப்பதை நாம் கண்கூடாக காண முடியும். அல்லாஹ் அந்த பாத்தில்களை ஒன்றுபடுத்தி சத்தியத்தை தெளிவானதாக்கி காட்டுகிறான்.
நபி(ஸல்) அவர்கள் மூன்று விதமான எதிரிகளை எதிர் கொண்டார்கள் (இணை வைத்த மக்கத்து முஷ்ரிக்குகள், யஹீதிகள் நசாராக்கள்). இவர்கள் அனைவரது கொள்கையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக இருந்த போதிலும், முற்றிலும் வேறுபட்டதாக இருந்த போதிலும் அவர்களிடையே நபி(ஸல்) அவர்களுடைய சத்திய பிரச்சாரம் வந்த போது அவர்கள் அனைவரும் ஒன்று பட்டு இதை எதிர்த்ததை நாம் பார்க்கின்றோம்.
இன்றைக்கும் இதே நிலை. சத்தியத்தை எப்படியாகினும் எதிர்க்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே கொண்டு அசத்தியங்கள் ஒன்று திரண்டு பலம் போல காட்டி நிற்பதை நாம் காணலாம். ஆனால் உண்மையில் அவர்கள் உள்ளங்கள் நிச்சயமாக சிதறிக் கிடக்கின்றன. (வ குலூபுகும் ஸத்தா)..... சத்தியம் மட்டுமே சிதறாமல் உறுதியாக நிற்கும் வல்லமை படைத்தது.
அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலிருந்தோ, சுவர்களுக்குப் பின்னாலிருந்தோ தவிர அவர்கள் ஒன்று சேர்ந்து உங்களிடம் போரிட மாட்டார்கள். அவர்களுக்கிடையே பகைமை கடுமையானது. அவர்கள் ஒன்று திரண்டுள்ளதாக நீர் கருதுவீர். அவர்களின் உள்ளங்களோ சிதறிக் கிடக்கின்றன. அவர்கள் விளங்காத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 59:14)
இரண்டு அணியினர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில் உங்களுக்குச் சான்று உள்ளது. ஓர் அணியினர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டனர். (ஏக இறைவனை) மறுப்போராக மற்றொரு அணியினர் இருந்தனர். தம்மைப் போல் இரு மடங்காக கண்களால் அவர்களைக் கண்டனர். தான் நாடியோரைத் தன் உதவியின் மூலம் அல்லாஹ் வலுப்படுத்துகிறான். அறிவுடையோருக்கு இதில் பாடம் உள்ளது. (அல்குர்ஆன் 3:13)
சத்தியத்தில் உள்ளவர்களுக்கும், அசத்தியத்தில் உள்ளவர்களுக்கும் அல்லாஹ் இது போலவே உதாரணம் கூறுகிறான். உறுதியான ஈமான் இல்லாமல் சறுக்கி விடுபவர்கள் நுரைகளை, சருகுகளை, குப்பைகளை போல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றவர்கள் என்றும் உறுதியான ஈமான் கொண்டவர்கள் அடியில் தங்கி விடும் வேர்களை போன்று உறுதியானவர்களாக மக்களுக்கு பயனுள்ளவர்களாக உள்ளவர்கள் என்றும் கூறுகிறான்.
வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகி றது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன் 13:17)
எவ்வித சோதனைகள், துன்பங்கள் வந்த போதிலும் உறுதி குன்றாமல் நின்று சத்தியத்தை தம் இறுதி மூச்சுவரை கூறுவதே அந்த மாபெரும் வெற்றிக்கு நம்மை உரியவர்களாக ஆக்கிவிடும். அல்லாஹ் இதையே எதிரிகளை பார்த்து கூறுமாறு நபி(ஸல்) அவர்களுக்கு கட்டளை இடுகிறான்.
'(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரண்டு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் எங்களுக்கு எதிர் பார்க்கிறீர்களா? ஆனால் அல்லாஹ் தனது வேதனை மூலமோ, எங்கள் கைகளாலோ உங்களுக்குத் தண்டனை வழங்குவதையே நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். நீங்கள் எதிர்பாருங்கள்! உங்களுடன் நாங்களும் எதிர்பார்க்கிறோம்' என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 9:52)
பெரும் பாவங்களிலிருந்து விலகியிருப்பது
.
அல்லாஹ்வும் அவனது தூதரும் எதையெல்லாம் பெரும்பாவங்கள் என பட்டியலிட்டார்களோ அவற்றிலிருந்து முற்றிலுமாக விலகியிருப்பது..... அவற்றை வெருப்பது.... இவை வெற்றியின் அடையாளங்களாகும்.
இனைவைப்பு, கொலை, வட்டி போன்ற எல்லா பெரும்பாவங்களிலிருந்து எல்லா நிலையிலும் ஒதுங்கியிருக்க வேண்டும். உதாரணமாக அல்லாஹ் வட்டியை கடுமையான முறையில் சாடி அதை பெரும்பாவம் என சொல்கின்றான். நபி(ஸல்) அவர்களும் வட்டியை ஹராமாக்கி அதனோடு தொடர்புடைய அத்தனையையும் தடுத்துள்ளார்கள். இது போன்ற நிலையில் மறுமை வெற்றியை இலக்க்காக கொண்ட ஒவ்வொரு முஃமினும் இது போன்ற தடுக்கப்பட்ட அனைத்திலிருந்தும் முழுவதுமாக விலகியிருத்தல் வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:130)
சிலர் இனைவைப்பு போன்றவற்றை மட்டும் பெரும் பாவமாக கருதிவிட்டு வட்டி போன்றவற்றுடன் சுமூகமாக செல்வதை நாம் காண முடியும். இது நிச்சயம் வழிகேடான சிந்தனை என்பதில் கடுகளவும், கடுகின் முனையளவும் சந்தேகமில்லை.
அருவருப்பான காரியங்களிருந்து விலகியிருப்பது
அல்லாஹ்வுக்கும் அவனது கட்டளைகளுக்கும் மாறு செய்கின்ற அல்லது செய்யத் தூண்டுகின்ற அனைத்து அனாச்சாரங்களிலிருந்தும் விலகியிருத்தல் வேண்டும். குறிப்பாக நபி(ஸல்) நரகத்தை கொண்டு எச்சரிக்கை செய்த “பித்அத்” எனும் அனாச்சாரத்திலிருந்து முழுவதுமாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
விபச்சாரம், மது, சூதாட்டம், ஜோசியம், குறி, தாயத்து, தட்டு, தகடு, வாஸ்து, கத்தம், பஞ்சா, மீலாது, போன்ற அல்லாஹ்வின் வெறுப்பிற்குறிய காரியங்களிலிருந்து முற்றிலுமாக தூர விலக வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:90-91)
எல்லாம் அல்லாஹ்வுக்காக என தூய எண்ணம் கொள்வது
அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாக கொண்டு நம் செயல்கள் அமைந்தால் மட்டுமே மறுமையில் வெற்றிக்குரியவர்களாக நாம் மாற முடியும்.
'எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப் பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:162-163)
மாறாக, இவ்வுலகில் போற்றப்பட வேண்டி முகஸ்துதிக்காக நற்செயல்களை செய்தால், அது ரியா எனும் சிறிய இணை வைத்தலில் மூழ்கடித்து நரக நெருப்பில் தள்ளிவிடும்.... இதைப் பற்றி நபி(ஸல்) கூறினார்கள்....
“நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன். (புஹாரி: 6499 அறிவிப்பவர்: ஜூன்துப் (ரலி).
தாஃவா பிரச்சாரமாகட்டும், வணக்க வழிபாடுகளாகட்டும், நம்முடைய ஏனைய அமல்களாகட்டும் இவைகளை நாம் செய்வது அல்லாஹ்விடம் கூலியை பெருவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். இவ்வுலகிலேயே அனைத்து பலன்களையும் அடைந்து விட வேண்டும் என விரும்புவோரே அது கிடைக்காமல் சோதனை ஏற்படும் போது தளர்ந்து வழிதவறி விடுவதை பார்க்கின்றோம்.
நம்முடைய அனைத்து விடயங்களிலும் விருப்பு வெருப்புகளை அல்லாஹ்வுக்காக மட்டுமே என ஆக்கிக்கொள்வது இதில் முதன்மையானதாகும்...
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 58:22)
பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை
அல்லாஹ்வின் பாதையில் தம்முடைய வாழ்க்கையை சீராக்கிக் கொள்ளும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இவ்வுலக சோதனை என்பது நிச்சயம். அதனை மறுமை பயன்களுக்காக சகித்துக் கொள்ளும் சகிப்புத்தன்மையே பக்குவப்பட்ட ஈமானுக்கு உகந்ததாகும். மறுமை வெற்றிக்கும் உரியதாகும்.
நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:200)
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. 'அல்லாஹ்வின் உதவி எப்போது?' என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)
'அவர்கள் சகித்துக் கொண்டதால் இன்று அவர்களுக்கு நான் பரிசளித்தேன். அவர்களே வெற்றி பெற்றோர்' (என்றும் இறைவன் கூறுவான்.) (அல்குர்ஆன் 23:111)
மனிதர்கள் நல்லவற்றுக்கு அவசரப் படுவது போல் அவர்கள் விஷயத்தில் தீங்கு செய்வதற்கு அல்லாஹ் அவசரப் பட்டிருந்தால் அவர்களின் காலக்கெடு அவர்களுக்கு முடிக்கப்பட்டிருக்கும். நமது சந்திப்பை நம்பாதவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டு விடுவோம். (அல்குர்ஆன் 10:11)
அடக்கம்
சத்தியத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும், அதை பிரச்சாரம் செய்பவர்களையும் அல்லாஹ் இவ்வுலகத்தில் சிறுச் சிறு வெற்றிகளை கொண்டும் சோதிப்பான். அது போன்ற வெற்றிகளின் போது “இது என்னுடைய முயற்ச்சியால் விளைந்தது” என இறுமாப்பு கொள்ளாமல் இது என்னுடைய ரப்பின் நாட்டப்படியே ஏற்பட்டது என அடக்கம் மேலிட வேண்டும். பல சகோதரர்கள் இந்த விடயத்தில் அகம்பாவம் கொண்டு மறுமை நன்மையை பாழாக்கி விடுவதை நாம் காண்கிறோம்.
நபி(ஸல்) வரலாற்றில் மிக முக்கியமான ஓர் நிகழ்ச்சியான மக்கா வெற்றியின் போது இறக்கியருளப்பட்ட வசனம் இதையே தெளிவாக பறைசாற்றுகிறது.
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 110:1-3)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்
நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும் போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள். (அல்குர்ஆன் 32:15)
அல்லாஹ்வின் பாதையில் அறப்போர்
அல்லாஹ்வுக்காகவும், அவனது மார்க்கம் மேலோங்க வேண்டுமென்பதற்காகவும் தம்முடைய உடல், பொருளால் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிபவர்களையும் வெற்றியாளர்கள் என அல்லாஹ் பெருமை படுத்துகிறான்.
இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ, வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம். (அல்குர்ஆன் 4:74)
நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத், இஞ்சீல், மற்றும் குர்ஆனில் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட தன் வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:111)
நம்பிக்கை கொண்டோரே! (களத்தில்) ஓர் அணியைச் சந்தித்தால் உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 8:45)
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர், அல்லாஹ்விடம் மகத்தான பதவிக்குரியவர்கள். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 9:20)
யாருக்கு இல்லை இந்த மகத்தான வெற்றி
இது வரை அந்த மகத்தான மறுமை வெற்றிக்கு சொந்தக்காரர்கள் யார் என குர்ஆன் கூறுவதை கண்டோம். அதே நேரத்தில் அந்த மகத்தான வெற்றியை இழந்து இழிவுக்குள்ளாக்கப்பட்டு மறுமையில் நஷ்டமடைந்தோரையும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தோலுரித்து காட்டுகின்றான்.
இத்தகைய இழிவுக்குரியவர்கள் எத்தகையோர் என்றால்
இணைவைக்கும் முஷ்ரிக்குகள்
ஏக இறைவனாகிய அந்த ரப்புல் ஆலமீனுக்கு இணை துணைகளை கற்பித்து அவனுக்கு நிகராக அவர்களை உயர்த்தும் பாவிகள். அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமான அவனது பண்புகளை மற்ற அவனது படைப்பினங்களுக்கும் உண்டென கருதுவது தெளிவான இணைவைப்பாகும். மறுமையில் இவற்றின் கூலி சுட்டெரிக்கும் நரகமே.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 23:117)
அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்யாதீர்! (அவ்வாறு செய்தால்) இழிந்தவராகவும், (இறையருளை விட்டும்) தூரமாக்கப்பட்டவராகவும் நரகத்தில் வீசப்படுவீர்! (அல்குர்ஆன் 17:39)
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு வழி காட்டியவனா? தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!' என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 27:60-64)
இறைவனை மறுக்கும் காபிர்கள்
அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வை மறுத்து அவனுடைய சந்திப்பை பொய்யென கருதிய காபிர்கள் (நிராகரிப்பாளர்கள்) மறுமையில் தோல்வியை தழுவியர்வகளாக நரகத்தில் வீசப்படுவார்கள். இவர்களே சுட்டெரிக்கும் நரகத்தின் எரிபொருளாகி மறுமையில் இழிநிலையை அடைந்தவர்கள்.
'(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்' (என்றும் கூறினோம்.) (அல்குர்ஆன் 2:39)
(நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. (நம்மை) மறுக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம். (அல்குர்ஆன் 35:36)
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'(என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)
இறைவனின் கண்ணியத்தை குறைப்பவர்கள்
அந்த ஏக நாயனான அல்லாஹ்வை அவனது தகுதியிற்கு ஏற்றாற்போல் கண்ணியப்படுத்தாதவர்களும் மறுமை நாளின் கடும் வேதனைக்கு உள்ளாவார்கள். இவர்கள் இரு சாரார்கள் 1) படைப்பினங்களை அல்லாஹ்வின் அளவிற்கு உயர்த்தியவர்கள். 2) அல்லாஹ்வின் கண்ணியத்தை அவனது படைப்பினங்களின் அளவிற்கு குறைத்தவர்கள். இருவரும் குற்றவாளிகளே.....
அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (அல்குர்ஆன் 39:67)
வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற் குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல்குர்ஆன் 4:171)
(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட் களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 6:101)
எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன். ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு' என்று தான் அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும். (அல்குர்ஆன் 19:35)
சத்தியம் தம்மிடம் வந்தபின் தர்க்கம் புறிந்து அதை ஏற்க மறுப்பவர்கள்.
உண்மையான சத்தியம் தம்மிடம் வந்த பின் அதை ஏற்க மறுத்து, அகம்பாவம் கொண்டு தாம் உள்ள அசத்தியிலேயே தொடரும் பாவிகள் நிச்சயம் கடும் வேதனையை சுமந்தவர்களாக மறுமையில் நரகம் புகுவார்கள் என அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! (அல்குர்ஆன் 31:7)
தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு அதைப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நாம் குற்றவாளிகளைத் தண்டிப்போம். (அல்குர்ஆன் 32:22)
எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவ ருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான். (அல்குர்ஆன் 43:36)
இட்டுக்கட்டிய பாவிகள்
அல்லாஹ் கூறாததை அவன் மீது இட்டுக்கட்டி அற்பக்கிரயத்திற்காக இந்த தூய மார்க்கத்தை வியாபாரமாக்கி வயிறு வளர்க்கும் பாவிகள் மறுமை நாளின் கடும் வேதனைக்கு சொந்தக்காரர்கள். அல்லாஹ் சொல்லாததை அவன் மீது இட்டுக்கட்டியதே இதன் காரணம். இவர்களே பாவிகள், குற்றவாளிகள்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:21)
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:17)
'அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்' என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?. 'அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவோர் வெற்றி பெற மாட்டார்கள்' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:68-69)
பிரிவுகளை ஏற்படுத்தியவர்கள்
ஒரு இறைவன், ஒரு மார்க்கம் என்றிருக்க இந்த மார்க்கத்தை தம் இஷ்டத்துக்கு கூறு போட்ட பாவிகளும் மறுமை வெற்றியை சுவைக்க மாட்டார்கள். “லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்” என சஹாதா ஏகத்துவ கலிமாவை மொழிந்துவிட்டு பின்னர் பல கூறுகளாக பிரிந்துவிட்ட்தே இவர்களின் நஷ்ட்த்திற்கு காரணம்.
தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:159)
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:105)
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறு வதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். (அல்குர்ஆன் 3:103)
இது போன்ற இழி நிலையிலிருந்து நம் அனைவரையும் அந்த ஏக இறைவன் காத்து அருள் பாலிப்பானாக. அவனது சத்திய மார்க்கத்தில் உறுதியுடன் நிற்கக் கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக. அந்த தூய இரட்சகனுக்கு இணை/துணை கற்பிக்கும் மாபெரும் பாவத்தை விட்டும் பாதுகாப்பானாக.
ஈமான் கொண்டு, அதில் உறுதியாக நின்று, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, இறையச்சம் கொண்டு, நல்லறங்கள் செய்யக் கூடிய கூட்டத்தில் நம் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பானாக.
எந்நிலையிலும் கொண்ட சத்தியக் கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் இறுதி மூச்சு வரை முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லீமாகவே மரணிக்கக் கூடிய நற்பாக்கியத்தையும், மறுமையில் பாவங்கள் மன்னிக்கப்பட்டு உயர்ந்த சொர்க்கமாகிய ஜன்னத்துல் பிர்ஃதவ்ஸில் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து வெற்றி பெறச் செய்வானாக. ஆமீன்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்! (அல்குர்ஆன் 3:102)
தொகுப்பு: அபு சாரா(அல்-ஜுபைல், சவுதி அரேபியா)
துணை நின்றவை: ஆன்லைன் பி.ஜெ, தமிழ் குர்ஆன்
அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை
அவ்லியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?
காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று....
இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் ....
மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ.....
ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்
குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?
காதலர் தினம் எனும் கலாச்சார சீரழிவு....
இஸ்லாத்தின் பார்வையில் ...காதல்
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?
மறுமை வெற்றி யாருக்கு?
ஜின்களும் நாமும்
பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:-
இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.
மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?
இந்துப் பெண்ணை ஒரு இஸ்லாமியன் மணக்களாமா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக